சனி, 14 ஏப்ரல், 2012

சித்திரையாளே சிரித்து வாடி.....!


நிலத்தில் எம் வாழ்வு
நிலையான அமைதி
கொள்ள
இத்தரை எங்கும்
இன்பம் வழிந்தோட
சித்திரையாளே
சிரித்து வாடி !

வேற்றுமைகள் நீங்கி
ஒற்றுமை தலைத்தோங்கிட
வேதனையில் உழலும்
சொந்தங்கள் வாழ்வில்
விடியலைத் தர
''நந்தன'' எனும்
பெயர் குடி
சித்திரையாளே
சிரித்து வாடி !

மனைகள் எங்கும்
மங்களம் தித்திக்க
வழிமறிக்கும் தடைகள்களை
உடைத்து
வாழ்வில் முன்னேற
புத்தாடை புனைந்து
புதுமைகள் பல படைக்க
வரம் ஒன்று வேண்டிக்
கரம் கூப்பி நிற்கின்றோம்
சித்திரையாளே
சிரித்து வாடி !

காதலுறு உள்ளங்கள்
கனிப்புடன் கரம் பற்றிட
கருணை காருண்யம்
மனமெங்கும் கரை புரண்டோட
வறுமை பிணிகள் நீங்கி
வாழ்வில் வசந்தங்கள் மலர
இளவேனிற் காலத்து
இளங்கன்னி
சித்திரையாளே
சிரித்து வாடி !

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஒரு பெண்ணின் உணர்வுகள் !


நானும் ஒரு பெண்
ஆனால்
எனக்குள்ளும் உணர்வுகள்
இருக்கிறது
என்பதை
இன்னும் ஏன் நீங்கள்
புரிந்து கொள்ளவில்லை ?

என் வெள்ளைத் தோலை
உற்று நோக்கும்
வெட்கம் கெட்ட
மனிதர்களே !

எனக்குள் ஒழிந்திருக்கும்
வெள்ளை இதயத்தின்
விசும்பல்களை
அறிவீரோ ?

பளிச்சிடும் மேனி ;
பருத்த தொடை ;
பட்டுக் கன்னம் ;
பரிமளிக்கும் கூந்தல் ;
சிறுத்த இடை ;
பெருத்த தனங்கள் ;
இவை இருந்தால் தானே
உங்கள் அகராதியில்
எனக்கு பெண்
என்று பெயர்

உங்கள் கண்ணுக்குத்
தெரிவது
என் புற அழகு
மட்டும் தான்

கால் நடைகளைப் போல
கீழ்த்தரமாக
எங்கள் இனத்தை
அடக்கியாள நினைக்கும்
ஆண் வர்க்கத்துக்கு
ஒன்றை மட்டும்
உரத்து சொல்ல விரும்புகிறேன்

நாங்கள் பூப் போல
மென்மையானவர்கள் தான்
வன்மையும்
எங்களுக்குள் குடியிருக்கின்றது
ஜாக்கிரதை !


குறிஞ்சிக் கவி செ.ரவிசாந்

தெய்வீகக் காதல்


மனிதரைக் காதலித்தால்
வருவதெல்லாம்
துன்பம் தான்
அதனால் தான்
நான் இப்போது
கடவுளைக் காதலிக்க
ஆரம்பித்திருக்கிறேன்

இன, மொழி
சாதி வேறுபாடு எதுவும்
என் காதலுக்கில்லை
காமம் கடந்த என் காதல்
உருவமில்லாதது
ஆனால்
சுதந்திரமானது...!

உறவுகளின் எதிர்ப்புகள்
எதுவுமற்ற என் காதல்
உண்மையானது
புனிதமானது

என் காதலை எவராலும்
எளிதில் உணர்ந்து
கொள்ள முடியாது

ஏனெனில் இது
மனித ஆசைகள் உணர்வுகள்
அனைத்திற்கும்
அப்பாற்பட்ட
தெய்வீகக் காதல் !


குறிஞ்சிக் கவி செ. ரவிசாந்

நட்பு பிரியும் தருணம்


காலையில் பூத்து
மாலையில் மடியும்
பூக்களுக்குக் கூட
ஒரு நாள் தான் மரணம்
ஆனால் !

உயிரில் கலந்து
ஒன்றாய்ப் பழகி
ஒன்றாய்க் கூடி
மகிழ்ந்த நட்பு
பிரிகின்ற தருணம்
வருகின்ற போது

பிரிவுக்கு விடை சொல்ல
முடியாமல்
கண்ணீருடன் பிரிகின்ற
கணங்கள் ஒவ்வொன்றும்
மரணம் தான்......

காத்திருப்பு !


உனக்காக காத்திருப்பது
நான் மட்டுமல்ல
உனது நினைவுகளைச்
சுமக்கும்
எனது இதயமும் தான் !

காத்திருக்கும் காதல்
சுகமானது
காலமெல்லாம்
காக்க வைக்கும்
காதல் ரணமானது !

காத்திருப்போம்
காதலிப்போம்
காதல் உலகம் கண்டு
மகிழ்வோம் !

திங்கள், 2 ஏப்ரல், 2012

என் காதல் தேசம் !

என்னைப் பார்த்துப்
பலரும் கேட்கிறார்கள்
நீ யாரையாவது
காதலிகிறாயா என்று!
எப்படிப் புரியவைப்பேன்....?

என் இதயத்தில்
கோயில் கட்டி
பூஜை செய்யும்
என் உயிர் காதலி
அழகிய என் தேசமென்று...!

மீண்டும் சந்திப்போம்!


நட்பென்ற இனிய சோலையிலே
நடை பயின்று நாம் இருவரும்
இன்று பிரிவென்ற
மூன்றேழுத்தால்
பேதலித்து நிற்கின்றோம்...

உன்னைக் காணாத
என் முகம் இன்று
திருந்தி இருந்தும்
எரியாத விளக்காக
பிரகாசிக்க மறுக்கின்றது!

அன்பு என்ற பாலைவனத்தில்
திசை தெரியாப் பறவைகளாய்
நாமிங்கு...

அடுத்த பிறப்பென்று
ஒன்றிருந்தால்
மேகத்தில் ஒன்றாக
நானும் நீயும் சந்திப்போம்!